5ஆம் வகுப்பு,8ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது பள்ளி குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் செயல். அதனால் தமிழக அரசு குழத்தைகளின் உரிமைக்கு எதிரான இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சி.சே.இராசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி தரத்தை முன்னேற்றும் வகையில் 2019-20ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மூன்று பருவ தேர்வு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் நலன் சார்ந்த நடைமுறைகள் உள்ளப்போது அதனை அப்படியே கைவிட்டுவிட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை புகுத்துவது என்பது குழந்தைகளையும், பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயல் ஆகும். பொதுத் தேர்வை திணித்து குழந்தைகளை அச்சத்தோடும், பதட்டதோடும் வைத்திருப்பது மனித உரிமை மீறல் ஆகும். குழந்தைகள் மத்தியில் தேர்வு குறித்த பயத்தையும், அச்சத்தையும் இது ஏற்படுத்தி விடும். இதனால் 'இடை நிற்றல்' அதிகமாக ஏற்படவும், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வியானது பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் எதிர்காலத்தில் உருவாகும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கல்வியில் அவசர அவசரமாக இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது கண்டனத்துக்குரியது.அது மட்டுமல்லாமல், இவ் அரசாணையானது இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-க்கும் வாழ்வுரிமைக்கும் எதிராக அமைந்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், குழந்தை மனநல நிபுணர்கள், சட்டநிபுணர்களுடன் முறையாக கலந்து பேசி குழந்தைகள் பங்கேற்புடன் அரசு கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும், .அவசர அவசரமாக இது போன்ற குழந்தைகளின் மனநிலைக்கு எதிரான, கல்வி உரிமைக்கு எதிரான முடிவுகளை எடுப்பது சட்டத்தை மீறிய, சர்வதேச குழந்தைகள் உரிமை பிரகடனத்தை மீறிய செயல் ஆகும். அதனால் 5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு திட்டத்தை அரசு உடனடியாக குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்